3-வது தாக்குதல் குறித்து எதுவும் சொல்ல மாட்டேன் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
Mangaluru: பாஜக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 முறை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
ஊரி முகாம் தாக்குதலுக்கு பின்னர் இந்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலை நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாலகோட்டிற்குள் சென்று விமானப்படை குண்டுமழை பொழிந்தது. வெளிப்படையாக இந்த இரு தாக்குதல் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 3 தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ராஜ்நாத் சிங் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாம் 3 முறை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளோம். நான் 2 தாக்குதல் குறித்த விவரங்களை சொல்கிறேன். முதலாவது ஊரி முகாம் தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை நடத்தினோம்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாலகோட்டை அட்டாக் செய்தோம். ஆனால் 3-வது தாக்குதல் எப்படி நடந்தது என்பதை நான் சொல்ல மாட்டேன். இந்தியா பலவீனமானது என்று எந்தவொரு நாடும் எண்ணிக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
கடந்த 1971-ல் விமானப்படை போர் விமானங்களை பாகிஸ்தானுக்குள் அனுப்பி இந்தியா தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் கடந்த மாதம் 26-ம்தேதி பாலகோட்டி தீவிரவாத முகாமை தகர்க்க இந்தியா போர் விமானங்களை அனுப்பியது.
கடந்த மாதம் 14-ம்தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பாலகோட் அட்டாக் நடத்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் 2016-ல் ஊரி முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 வீரர்கள் உயிரிழந்தார்கள். இதற்கு பதிலடியாக சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை இந்திய ராணுவம் நடத்தியது.
இவைகளுக்கு முன்பாக மணிப்பூரில் 18 வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மியான்மருக்குள் புகுந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை நடத்தி, தீவிரவாத முகாம்களை அழித்தது.