This Article is From Apr 12, 2019

'எம்.பி.க்கான அனைத்து தகுதியும் பிரகாஷ் ராஜுக்கு உண்டு' - வீடியோ வெளியிட்டு விஷால் பிரசாரம்!!

நினைத்தபடியே பிரகாஷ்ராஜ் சார் இந்த தேர்தலில் வெற்றி பெற்று அவரது தொகுதி மக்களுக்கு நல்லது செய்வார் என நம்புகிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Written by

கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

எம்.பி.யாகும் அனைத்து தகுதியும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு உண்டு என்று அவரை ஆதரித்து நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டிருக்கிறார். 

நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் விஷால் பேசியிருப்பதாவது-
இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுக்கு நெறய தைரியம். அந்த வகையில் பொருத்தமான வேட்பாளராக பிரகாஷ் ராஜ் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் எனது அன்பான மூத்த சகோதரர். 

இந்த சமுதாயத்தில் என்ன தீங்கு நடந்தாலும் அதற்கு எதிராக பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்துள்ளார். நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வு நமது குடும்பத்திற்கு மட்டுமல்ல; இந்த சமுதாயத்திற்கும் சேர்த்து செய்ய வேண்டும் என்று ஒருசில மனிதர்கள்தான் யோசிப்பார்கள். 

Advertisement

அந்த வகையில் பிரகாஷ் ராஜ் இந்த தேர்தலில் வெற்றிபெற, மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்படுவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளவராக இருக்கிறார். பெங்களூரு மத்திய தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். வரிசை எண் 14. விசில் சின்னத்தில் அவருக்கு வாக்களியுங்கள். 

நினைத்தபடியே பிரகாஷ்ராஜ் சார் இந்த தேர்தலில் வெற்றி பெற்று அவரது தொகுதி மக்களுக்கு நல்லது செய்வார் என நம்புகிறேன். 
இவ்வாறு விஷால் அந்த வீடியோவில் பேசியுள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement