கருத்துக் கணிப்புகளை முழுமையாக ஏற்க முடியாது என்று தம்பிதுரை கூறியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற இயலாதவர்களை திணித்தால் அதற்கு பெயர்தான் வாரிசு அரசியல் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
அதிமுகவில் வாரிசு அரசியல் என்று ஏதும் கிடையாது. தேர்தலில் வெற்றி பெற இயலாதவர்களை திணித்தால் அதற்கு பெயர் வாரிசு அரசியல். கருத்துக் கணிப்பை விட மக்கள் கணிப்பு என்னவென்றுதான் பார்க்க வேண்டும். ஊடகங்களின் கருத்துக் கணிப்பை சில சமயங்களில் ஏற்றுக் கொள்ள முடியாது.
கருத்துக் கணிப்பு என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை. இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் கருத்துக்கணிப்பு எல்லாம் பிப்ரவரியில் எடுக்கப்பட்டவை.
இப்போது நிலைமை மாறிவிட்டது. அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரும் வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. இந்த கூட்டணி இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. கருத்துக் கணிப்பு ஏற்பட்டபோது இந்த கூட்டணி அமைக்கப்படவில்லை.
அதிமுக எப்போதும் வலிமையான கட்சி. மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது அதிமுகவின் வலிமை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். இப்போது கருத்துக் கணிப்பு எடுத்தார்கள் என்றால் 40 தொகுதிகளிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். அதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.