திருமா வளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் எழுதிய சட்டம் இந்தியாவை ஆளக்கூடாது என்பதுதான் மோடியின் நோக்கம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் பேசியுள்ளார்.
மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமா வளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் பகுதியில் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை அழித்து ஒழித்து விடுவார். அம்பேத்கர் எழுதிய சட்டம் இந்தியாவை ஆளக் கூடாது என்பதுதான் மோடியின் நோக்கம்.
இரட்டை இலைக்கு வாக்களித்தால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வர நேரிடும். ஜெயலலிதாகூட இப்போது இல்லை. அக்கட்சிக்கு வாக்களித்தால் வாக்குகள் சிதறி நிலைமை என்னவாகும் என்பதை யோசித்து பாருங்கள்.
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றத்துடிக்கும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.