This Article is From Mar 18, 2019

மக்களவை தேர்தல் : தமிழகத்தில் 8 தொகுதிகளில் அதிமுக - திமுக நேரடிப் போட்டி!!

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி முதன்முறையாக மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்

மக்களவை தேர்தல் : தமிழகத்தில் 8 தொகுதிகளில் அதிமுக - திமுக நேரடிப் போட்டி!!

தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

Chennai:

மக்களவை தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுகவும், திமுகவும் 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. தென் சென்னை, காஞ்சிபுரம் (எஸ்.சி.), திருவண்ணாமலை, நெல்லை, மயிலாடுதுறை, சேலம், நீலகிரி (எஸ்.சி.) மற்றும் பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. 

இரு கட்சிகளும் தமிழகத்தில் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 19 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கரூர் தொகுதியிலும், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

அதிமுகவில் திருவள்ளூர் தொகுதி எம்.பி. பி. வேணுகோபால், தென் சென்னை எம்.பி. ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஜெயவர்தனை எதிர்த்து திமுக தரப்பில் தமிழச்சி தங்க பாண்டியன் நிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக தரப்பில் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியிலும், நீலகிரி தனித் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஸ்ரீபெரும்புதூர்  தொகுதியில் டி.ஆர். பாலுவும் போட்டியிடுகின்றனர். 

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெகத் ரட்சகன் அரக்கோணத்திலும், எஸ்.எஸ். பழனி மாணிக்கம் தஞ்சையிலும் போட்டியிடுகின்றனர். முன்னாள் மாநில அமைச்சர் ஆர்காட் வீராசாமியின் மகன் கலாநிதி வட சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். 

இதேபோன்று முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சியில் போட்டியிடுகிறார். இதேபோன்று திமுக தரப்பில் காஞ்சிபுரத்தில் ஜி. செல்வமும், தர்மபுரியில் செந்தில்குமாரும், திருவண்ணாமலையில் அண்ணாதுரையும், சேலத்தில் பார்த்திபனும், பொள்ளாச்சியில் சண்முக சுந்தரமும், திண்டுக்கலில் வேலுசாமியும், கடலூரில் ஸ்ரீரமேஷும், மயிலாடுதுறையில் ராமலிங்கமும், தென்காசியில் தனுஷ் குமாரும், நெல்லையில் ஞானதிரவியமும் போட்டியிடுகின்றனர். 

இந்த தேர்தலில் 12 புதுமுகங்களை திமுக களத்தில் இறக்கியுள்ளது. இதேபோன்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களையும் திமுக அறிவித்துள்ளது. 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

.