This Article is From Apr 01, 2019

''தூத்துக்குடியில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை ஏற்பாடு செய்து தருவேன்'' : தமிழிசை உறுதி

காங்கிரஸ் அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டமானது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

''தூத்துக்குடியில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை ஏற்பாடு செய்து தருவேன்'' : தமிழிசை உறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடன் சுமை அதிகரித்து விடும் என்கிறார் தமிழிசை

தூத்துக்குடியில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை ஏற்பாடு செய்து தருவேன் என்று அங்கு போட்டியிடும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தூத்துக்குடி, கோவை, சிவகங்கை உள்பட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடுகிறார்.

திமுக தரப்பில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. இந்த நிலையில் தமிழிசை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

ஒன்றை சொல்கிறேன் என்றால் அதை முழுவதும் அலசி ஆராய்ந்து விஞ்ஞானப்பூர்வமாகத்தான் கருத்துக்களை தெரிவிப்பேன். வாழை நாரில் இங்கு சேலை செய்கிறார்கள். இங்கு கிடைக்கும், வாழை, நுங்கு போன்றவை பிரமாண்டமான தொழிற்சாலைகளுக்கு வழி வகுக்கும். 

பனைத்தொழில் அழிந்து வருகிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏதாவது ஒருவகையில், அரசாங்க வேலை என்று சொல்ல மாட்டேன்; தனியார் துறையிலோ அல்லது ஏதாவது ஒரு வகையிலோ அவர்களுக்கு வேலை பெற்றுத் தருவேன். இதற்கு தூத்துக்குடி மக்கள் எனக்கு வாய்ப்பு தர வேண்டும். 

ப. சிதம்பரம் கனவிலேயே இருக்கிறார். காங்கிரஸ் கட்சி கூறும் வறுமை ஒழிப்பு திட்டத்தை நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ. 3.5 லட்சம் கோடி தேவை. இதை திரட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி வரியை அதிகப்படுத்தும். கடன் அதிகரிக்கும். தொழிலை காங்கிரஸ் கட்சி முடக்கும். 

ஏழைகளுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். அது அவர்களது வாழ்வை உயர்த்துவதாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கூறும் பணம் கொடுக்கும் திட்டம் உலக அளவில் தோல்வி அடைந்த திட்டம். இவ்வாறு தமிழிசை பேசினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.