Goa Chief Minister: இன்று இரவுக்குள் பதவிப் பிரமாணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- கூட்டணி கட்சிகளுடன் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை நடத்தினார்
- நேற்று தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று காலை 5.30 வரை நீடித்தது
- கோவாவில் துணை முதல்வர்களாக 2 பேர் இருக்கின்றனர்
Panaji: கோவா அரசியலில் அதிரடி திருப்பமாக புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வாகியுள்ளார். அவர் தற்போது கோவா சபாநாயகராக இருந்து வருகிறார்.
கோவாவில் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கல் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இன்று அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கிடையே அடுத்த முதல்வராக யாரை நியமிப்பது என்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தன.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனால் கோவா அரசியலில் கடந்த 2 நாட்களாக குழப்பம் பெரும் அளவில் அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத அளவில், கோவா சபாநாயகர் பிரமோத் சாவந்த்தை முதல்வராக நியமிக்க பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு கூட்டணி கட்சிகளான மகாராஷ்டிராவதி கோமந்தக் கட்சி, கோவா முன்னணி கட்சி உள்ளிட்டவை சம்மதம்தெரிவித்துள்ளன.
கோவாவில் 2 துணை முதல்வர்கள் உள்ளனர். அமைச்சரவையில் மொத்தம் 12 உறுப்பினர்களே இருக்கின்றனர். எம்.ஜி.பி. கட்சியின் சுதின் தவாலிகரும், கோவா முன்னணியின் விஜய் சர்தேசியும் கோவாவில் துணை முதல்வர்களாக இருக்கின்றனர்.
அவர்கள் இருவரும்தான் தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். நேற்று மாலை கோவா வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று காலை 5.30 மணி வரையில் கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் பிரமோத் சாவந்தை முதல்வராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் பாஜகவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். கோவா முன்னணியில் 3 பேர், எம்.ஜி.பி. கட்சியில் 3 பேர், சுயேச்சைகள் 3 பேர் என கூடுதலாக 9 பேருடன் 21 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்து வருகிறது.
காங்கிரசுக்கு 15 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மீதமுள்ள 4 இடங்கள் 2 உறுப்பினகள் மறைவாலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் ராஜினாமா செய்ததாலும் காலியாக உள்ளன.
மேலும் படிக்க: கோவாவின் புதிய முதல்வராக அதிகாலை 2 மணிக்கு பதவியேற்றார் பிரமோத் சாவந்த்!