மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.
''மார்வாடி கடையில் வைத்த பொருளை மீட்டு விடலாம்.. அமித் ஷாவிடம் அடகுவைத்த அதிமுகவை மீட்கவே முடியாது'' என்று அதிமுக தலைவர்களை பார்த்து மு.க.ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கொளுத்தும் வெயிலை பாராமல் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தர்மபுரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது-
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் விட்டுச் சென்ற அதிமுகவை தான் பாதுகாத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ஆனால், அந்த இருவரையும் மறந்து விட்டு மோடியையும், அமித் ஷாவையும் தெய்வமாக எடப்பாடி பழனிசாமி வணங்கி வருகிறார்.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பாஜக தலைவர் அமித் ஷாவிடம் அதிமுகவை அடகு வைத்து விட்டார்கள். மார்வாடி கடையில் வைத்த பொருளை மீட்டு விடலாம். அமித் ஷாவிடம் அடகு வைத்த அதிமுகவை மீட்கவே முடியாது. கொலை வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக அதிமுக அமித் ஷாவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.