சேலத்தில் திமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
சென்னை - சேலம் இடையிலான 8 வழி விரைவு சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
சேலத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குகளை சேகரித்தார். பின்னர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது-
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அதிமுக கூறுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நீட் தேர்வுக்கு இப்போதே பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டதாக எனக்கு செய்தி வந்துள்ளது. இளைஞர்களை ஏமாற்றுவதற்காக அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய, மாநில ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பும், கோபமும் கொண்டுள்ளனர். 40 தொகுதிகளிலும் மக்களின் எழுச்சியை பார்க்க முடிகிறது. இதனால் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
உதய சூரியன் உதித்ததற்கு பின்னர்தான் இந்த தமிழ் சமூகம் வெளிச்சத்தை பார்த்திருக்கிறது. சென்னை - சேலம் இடையே 8 வழி விரைவு சாலை திட்டத்தை விவசாயிகளும், மக்களும் எதிர்த்து வருகின்றனர். இதனை ரத்து செய்வோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.