தமிழகம் மற்றும் புதுவையில் 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளராக நீண்ட இழுபறிக்கு பின்னர் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் எச். ராஜாவை கார்த்தி சிதம்பரம் எதிர்கொள்கிறார்.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. புதுவை மற்றும் தமிழகத்தில் மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
விருதுநகர் தொகுதியில் மாணிக் தாகூர், திருச்சியில் திருநாவுக்கரசர், கரூரில் ஜோதி மணி, கன்னியாகுமரியில் எச்.வசந்த குமார், திருவள்ளூரில் ஜெயக்குமார், தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், கிருஷ்ணகிரியில் செல்லக்குமார், ஆரணியில் விஷ்ணு பிரசாத், புதுச்சேரியில் வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று வெள்ளியன்று இரவு அறிவிக்கப்பட்டது.
ஆனால் சிவகங்கை தொகுதியில் மட்டும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. 2 நாட்களாக அந்த தொகுதி வேட்பாளர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது அங்கு கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை எதிர்த்து போட்டியிடுகிறார். கடந்த 2014 தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 4-வது இடத்தை பிடித்தார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மோதுகின்றன. கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்த குமார் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.