தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழியும், தமிழிசையும் நல்ல வேட்பாளர்கள் என்று பிரேமலதா கூறினார்.
மக்களவை தேர்தல் பிரசாரத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதியாக வருவார் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு அதிமுக 4 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. வடசென்னை தொகுதியில் மோகன்ராஜ், கள்ளக் குறிச்சியில் எல்.கே. சுதீஷ், விருதுநகரில் அழகர்சாமி, திருச்சியில் இளங்கோவன் ஆகியோர் தேமுதிக வேட்பாளர்களாக களத்தில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பியுள்ள விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார் என்று கூறினார்.
பிரேமலதா அளித்த பேட்டியில் கூறியதாவது-
தேர்தலில் வெற்றி பெறும் தேமுதிக உறுப்பினர்கள் தமிழகத்தின் நலனை மத்திய அரசிடம் வலியுறுத்துவார்கள். தூத்துக்குடியில் திமுக சார்பாக கனிமொழியும், எங்கள் கூட்டணி சார்பாக பாஜக தமிழக தலைவர் தமிழிசையும் போட்டியிடுவதை ஆரோக்யமானதாக பார்க்கிறேன்.
அரசியலில் அதிக பெண்கள் வரவேண்டும். தூத்துக்குடியில் 2 பெண்கள் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. இருவருமே நல்ல வேட்பாளர்கள். மக்களுக்கு அவர்கள் நன்கு பரிச்சயமானவர்கள். அங்கு வெற்றி பெறுவது யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் உறுதியாக வருவார். அவர் முகத்தை பார்த்தாலே போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். உறுதியாக விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார். வரும் 27-ம்தேதியில் இருந்து 40 தொகுதிகளுக்கும் எனது பிரசார பயணத்தை ஆரம்பிக்கிறேன்.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)