தேர்தல் பிரசாரம் நாளை மறுதினத்துடன் முடிவுக்கு வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் மக்களவை தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாரா என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் அவர் பிரசாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பின்னர் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுக மற்றும் அதிமுக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் இறுதியாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது.
முன்னதாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக 7 மக்களவை தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் கேட்டுப் பெற்றுக் கொண்டது. இதே அளவுக்கு தங்களுக்கும் தொகுதிப் பங்கீடு செய்ய வேண்டும் என தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் கடைசியில் அக்கட்சிக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 5 சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதை விட தேமுதிகவுக்கு குறைவாக ஒதுக்கப்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதன்பின்னர் தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவாரா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் அவர் அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக் கொண்டு வந்துள்ள நிலையில், பிரசாரம் செய்யும் அளவுக்கு அவரது உடல் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று முதல் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தென்சென்னை, வடசென்னை,மத்திய சென்னை ஆகிய 3 தொகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என தேமுதிக தெரிவித்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)