This Article is From Apr 15, 2019

' மறந்துடாதீங்க... கொட்டு முரசு சின்னம்...' - தேர்தல் பிரசாரத்தில் இறங்கிய விஜயகாந்த்!!

அதிமுக கூட்டணியினர் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். நாளையும் அவர் பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

' மறந்துடாதீங்க... கொட்டு முரசு சின்னம்...' - தேர்தல் பிரசாரத்தில் இறங்கிய விஜயகாந்த்!!

வட சென்னை மக்களவை தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

''கொட்டு முரசுக்கு ஓட்டுப் போட மறந்துடாதீங்க'' என்று கூறி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்றுதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார வாகனத்திற்குள் அமர்ந்தவாறே அவர் பேசத் தொடங்கினார். 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் என 4 தெழகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கள்ளக் குறிச்சியில் எல்.கே. சுதீஷ் போட்டியிடுகிறார். திருச்சியில் இளங்கோவனும், விருதுநகரில் அழகர்சாமியும், வடசென்னையில் மோகன் ராஜும் போட்டியிடுகின்றனர். 

அவர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜயகாந்த் பிரசார களத்தில் குதித்துள்ளார். 

உடல் நல பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிலகாலம் தங்கியிருந்து விஜயகாந்த் சிகிச்சை பெற்றார். கடந்த மாதம் அவர் தமிழகம் வந்தபின்புதான் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று அவர் வட சென்னை மக்களவை தொகுதியில் கட்சி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தை தவிர்த்து, வாகனத்திற்குள் இருந்தவாறு விஜயகாந்த் செய்தார். வழிநெடுகிலும் இருந்தவர்களை பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட அவர், கையில் இருந்து முரசு சின்ன போடுகளை காட்டியும் வாக்குகளை சேகரித்தார். 

விஜயகாந்த் தனது பிரசாரத்தின்போது, 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறை சொல்லி ஸ்டாலின் வெற்றி பெறப் பார்க்கிறார்' என்று பேசத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய விஜயகாந்த், 'துரை முருகன் வீட்டில் பணத்தை வைத்தார்களே...' என்று கூறி விட்டு தான் பேசியது கேட்கிறதா என்று முன்னால் கூடியிருந்தவர்களை பார்த்து கேட்டார். ஆனால் துரை முருகனைப் பற்றி அவர் முழுமையாக பேசி முடிக்கவில்லை.

இதன்பின்னர் கொட்டுமுரசு சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்க என்று கூறிவிட்டு விஜயகாந்த் கிளம்பத் தொடங்கினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.