This Article is From Mar 19, 2019

திமுகவின் தேர்தல் அறிக்கை அறைவேக்கட்டுத் தனமானது: ஜெயக்குமார் கடும் தாக்கு!

திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை அறைவேக்கட்டுத் தனமாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை அறைவேக்கட்டுத் தனமானது: ஜெயக்குமார் கடும் தாக்கு!

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் முக்கியமாக, மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது..

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களில் அதிமுகவும் அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் மூலம், வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்பதை மறக்க வேண்டாம்.

திமுக தமிழருக்கு எதிரான செயல்களையே செய்துவருகிறது. அவர்களின் தேர்தல் அறிக்கை அரைவேக்காட்டுத் தனமானது. உதவாக்கரை அறிக்கையாக உள்ளது. நாங்கள் தமிழை ஆட்சி மொழியாக அறிவிப்போம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளோம். ஆனால் அவர்கள் தமிழை இணைமொழியாக அறிவிப்போம் என்று வாக்குறுதி அளித்திருப்பது துரோகம். அது என்ன ஆட்சி இணை மொழி? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் திமுக - காங்கிரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.

.