வாக்குப்பதிவுக்காக தமிழகம் முழுவதும் 67, 720 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியோடு நிறைவுபெற்றது. நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த மாதம் 10-ம்தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததுடன், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை ஆரம்பித்து விட்டன.
கொளுத்தும் வெயிலை பாராமல் தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், கூட்டணிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டன.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சி மற்றும் கூட்டணிகள் களம் காண்கின்றன. இதனால் 5 முனை போட்டி இங்கு உருவாகியுள்ளது.
அதிமுக கூட்டணியை ஆதரித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
திமுக கூட்டணி தரப்பில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, நடிகை குஷ்பு, வைகோ உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பதால் அந்த கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரசாரம் செய்தனர்.
காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பேசினார். எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு வரவில்லை. தேர்தல் பிரசாரம் இன்று ஓய்ந்த நிலையில் நாளை எந்த வேலையிலும் அரசியல் கட்சிகள் ஈடுபடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூத் சிலிப்பை வாக்காளர்களுக்கு அளிக்கும் பணி நாளை நடைபெறும். நாளை மறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைநடைபெறும். சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு, மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 39மக்களவை தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு பணிகளுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீசார் ஈடுபடுகின்றனர். பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 15 ஆயிரம் துணை ராணுவத்தினர் தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் 5.99 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இன்னும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் தேர்தல் பிரசாரம் நடைபெறாது. இந்த 4 தொகுதிகளிலும் பிரசாரம் மே 17-ம்தேதி வரை நடைபெறும். 19-ம் தேதி இங்கு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.