This Article is From Mar 19, 2019

ஸ்டாலின் நினைவாற்றலோடு இருக்கிறாரா? திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழிசை கிண்டல்

மு.க.ஸ்டாலின் நினைவாற்றலோடு இருக்கிறாரா? என்று திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கையை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கிண்டல் செய்துள்ளார்.

ஸ்டாலின் நினைவாற்றலோடு இருக்கிறாரா? திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழிசை கிண்டல்

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் முக்கியமாக, மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களில் அதிமுகவும் அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறும்போது, திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையில் பெண்கள் தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லா கடனாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மத்திய அரசின் முத்ரா வங்கி திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மோடியின் அதே திட்டத்தை மீண்டும் அறிவித்திருக்கிறார்.

கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அங்கு நான்காவது முறையாக நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்டாலின் தமிழகத்தில்தான் இருக்கிறாரா என்பதோடு நினைவாற்றலோடு இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.

இதேபோல், நீட் தேர்வு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர் எப்படிப் புத்துயிர் கொடுக்க நினைக்க முடியும்? ஏதோ மக்களுக்குச் சொல்வோம், சட்டரீதியில் அது நடைமுறைப்படுத்த முடியுமா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறார் போல.

திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை முற்றிலும் பொய்யானது. ஏற்கெனவே மத்திய அரசு நடத்துவதை, இல்லை என்று சொல்லும் அறிக்கையாக அமைந்துள்ளது. இதை மக்கள் நிச்சயமாக நம்பப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

.