This Article is From Mar 25, 2019

தேசிய அரசியலில் கமல்ஹாசன் - அந்தமானில் மம்தா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம்!!

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசினார். கொல்கத்தாவில் இந்த சந்திப்பு நடந்தது.

தேசிய அரசியலில் கமல்ஹாசன் - அந்தமானில் மம்தா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம்!!

கமல் உடனான சந்திப்பு குறித்து மம்தா பேட்டி அளித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசன் அந்தமானில் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. முதல்கட்டமாக 21 வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மீதம் உள்ளவர்களின் பெயரும், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. 

வெற்றி பெறச் செய்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர ஏற்பாடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட மக்களவை கவரும் விஷயங்கள் மக்கள் நீதி மய்ய கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளன. 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கமல்ஹாசன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவரது கொல்கத்தா இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார். இதுகுறித்து விவரங்கள் ஏதும் வெளிவராத நிலையில் இந்த சந்திப்பு தொடர்பாக மம்தா பானர்ஜி பேட்டி அளித்துள்ளார். 

அதில் அவர் கூறியதாவது- 
மக்கள் நீதி மய்யத்துடன் நாங்கள் அந்தமானில் கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு மனோரஞ்சன் பக்தாவின் பேரன் அயான் மோண்டல் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 6-ம்தேதி அந்தமானுக்கு செல்லும் கமல்ஹாசன், எங்களது வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பார். அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல் பேசுகிறார். இது மேற்கு வங்க மக்களும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

குறிப்பாக கமல்மீது மக்கள் நல்ல மரியாதை வைத்துள்ளனர். அவர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, நல்ல நடிகரும் கூட. அவரை அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 
இவ்வாறு மம்தா கூறினார். 

கமல் ஹாசன் கூறுகையில், ''அந்தமான் தேர்தல் குறித்து நானும் மம்தாவும் பேசினோம். நான் ஒரு சிறிய மாநில கட்சியை சேர்ந்தவன். மேற்கு வங்கத்தை நேசிப்பவன். அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஒவ்வொரு முயற்சியாக மேற்கொள்வோம்'' என்றார். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.