முக்கிய புள்ளிகள் மோதுவதால் தூத்துக்குடிதொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
தூத்துக்குடியில் தான் தத்தெடுத்த கிராமத்தைக் கூட முன்னேற்ற முடியாதவர் என்று கனிமொழியை பாஜக தமிழக தலைவர் தமிழசை சவுந்தர ராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் தூத்துக்குடிமக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும், அதிமுக கூட்டணி தரப்பில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர்.
இரு முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக தூத்துக்குடி மாறியுள்ளது. அங்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் முக்கிய பிரச்னையாக மாறியுள்ள நிலையில் தற்போது அங்கு தேர்தல் நடைபெறுகிறது.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையோ அல்லது தனியார் வேலையோ ஏற்பாடு செய்து தருவேன் என்று தமிழிசை சவுந்தர ராஜன் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த நிலையில், பிரசாரத்தின்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
எம்.பி.க்கள் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் ஸ்ரீ வெங்கடேசபுரம் என்ற கிராமத்தை கனிமொழி தத்தெடுத்தார். அங்கு எந்தப் பணியையும் அவர் செய்யவில்லை. தண்ணீர் வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்ட எதுவும் அங்கு இல்லை.
கோவிலுக்கு செல்வதற்கு பாதையில்லை. ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு எந்தப் பணியையும் கனிமொழி செய்யவில்லை. கிராமத்தையே முன்னேற்ற முடியாதவர்கள் எப்படி தூத்துக்குடி தொகுதியை முன்னேற்றுவார்கள்?. இவ்வாறு தமிழிசை கூறினார்.