நேற்று இரவு 7 முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சரியான முறையில் பஸ்கள் இயக்கப்படவில்லை
சென்னை கோயம்பேட்டிலிருந்து வெளியூர் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலில் வாக்களிக்கவும், தொடர் விடுமுறை காரணமாகவும் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமான பயணிகள் நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தங்களது சொந்த ஊரில் வாக்களிக்கும் உரிமை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். தேர்தல் நடைபெறுவதால் பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அதனால் வெளியூர் செல்லக் கூடியவர்கள் நேற்று மாலை முதல் பயணத்தை தொடர்வார்கள் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு 7 முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சரியான முறையில் பஸ்கள் இயக்கப்படவில்லை என பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொது மக்கள் தர்ணா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்களை களைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் மக்கள் செல்ல மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் சற்று நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் விடுமுறையையொட்டி, கூடுதலாக 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.