This Article is From Mar 18, 2019

அதிமுக - திமுக சார்பில் மக்களவை தேர்தலில் களமிறங்கும் வாரிசுகள்! - முழு விவரம்!

தமிழகத்தில் தலா 20 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவும், திமுகவும் நேற்று தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன

அதிமுக - திமுக சார்பில் மக்களவை தேர்தலில் களமிறங்கும் வாரிசுகள்! - முழு விவரம்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் மிகப்பெரும் கட்சிகளான அதிமுகவும் - திமுகவும் 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. தமிழகத்தில் தலா 20 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவும், திமுகவும் நேற்று தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன. இரு கட்சிகளும் ஒரே நாளில் பட்டியலை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இதேபோல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன.

திமுக - அதிமுக உள்ளிட்ட இரண்டு கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தொகுதி வேட்பாளர்கள் பெயரை நேற்றைய தினம் அறிவித்துவிட்டது. இந்நிலையில், இந்த தேர்தலில், 8 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன. அத்துடன் திமுகவும் - பாமகவும் 6 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், விசிகவும் - பாமகவும் ஒரு தொகுதியில் நேடியாக மோதுகின்றன.

இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக - திமுக சார்பில் களமிறங்கும் வாரிசுகள் பட்டியில் விவரம்,

அதிமுகவில் 4 வாரிசு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

1. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார்

2. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்,

3. அதிமுக எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன்

4. முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

திமுகவை பொறுத்தவரை 6 வாரிச வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

1. திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் மகள் கனிமொழி

2. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் மகன் தயாநிதி மாறன்

3. முன்னாள் அமைச்சர் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த்

4. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநீதி வீராசாமி

5. முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள், தமிழச்சி தங்கபாண்டியன்,

6. முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி உள்ளிட்டோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் இந்த பட்டியலில், 2 பெண் வேட்பாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அவர்களும் வாரிசுகளின் மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் (காஞ்சிபுரம் தனி தொகுதியில், மரகதம் குமரவேல்) என்ற ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

 

மேலும் படிக்கமக்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - முழுவிவரம்
 

.