This Article is From Mar 22, 2019

''தொண்டர்கள் வருத்தப்படுவார்கள் என்பதால் அதிமுகவுக்கு ஆதரவு'' - ஜெ. தீபா அதிரடி

அதிமுக கேட்டுக் கொண்டால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

''தொண்டர்கள் வருத்தப்படுவார்கள் என்பதால் அதிமுகவுக்கு ஆதரவு'' - ஜெ. தீபா அதிரடி

அதிமுக வெற்றிக்கு தனது பேரவை தொண்டர்கள் பாடுபடுவார்கள் என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.

அதிமுக தொண்டர்கள் வருத்தப்படுவார்கள் என்பதால் தனித்துப் போட்டியிடுவதை தவிர்த்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ. தீபா அறிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் போக மீதம் உள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவருமான ஜெ.தீபா 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து தனது பேரவையின் சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தீபா அறிவித்திருந்தார். ஆனால் யாரெல்லாம் முதலில் வேட்பு மனு பெற்றுக் கொண்டார்கள் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

மக்களவை தேர்தலுக்கு பின்னர் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் எங்கள் பேரவை தனித்துப் போட்டியிட்டால் அது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.

இதனால் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதை தவிர்த்து அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு எடுத்திருக்கிறோம். அதிமுக கேட்டுக் கொண்டால் நானும் பிரசாரத்தில் ஈடுபடுவேன். 

அதிமுகவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். அக்கட்சியில் நான் எந்தவொரு பொறுப்பையும் எதிர்பார்க்கவில்லை. 
இவ்வாறு அவர் கூறினார். 

.