This Article is From Apr 16, 2019

‘’வேலூரில் தேர்தல் ரத்து இல்லை’’ – தீயாக பரவிய வதந்திகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி!

திமுக பொருளாளர் துரை முருகன் வீட்டில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

‘’வேலூரில் தேர்தல் ரத்து இல்லை’’ – தீயாக பரவிய வதந்திகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி!

வேலூர் தொகுதியில் திமுக தரப்பில் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி தரப்பில் ஏ.சி. சண்முகமும் களத்தில் உள்ளனர்.

வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த தொகுதியில் காட்டுத் தீயாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதன் தொடர்ச்சியாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக குடியரசு தலைவர் நள்ளிரவு அல்லது இன்று காலையில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. இந்த நிலையில் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

.