This Article is From Feb 25, 2019

தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டாலும் கவலையில்லை: ஜெயக்குமார் அதிரடி!

தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டாலும் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டாலும் கவலையில்லை: ஜெயக்குமார் அதிரடி!

அதிமுக – பாமக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தேமுதிகவுடன் நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது,

அதிமுகவில் தேர்தலுக்கான கூட்டணிக் கதவுகள் திறந்து இருக்கிறது. அந்த வகையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டாலும் கவலையில்லை என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகள் வேறு வேறாக இருக்கும். எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அதேபோன்று பாஜகவுக்கும் கொள்கை இருக்கிறது. திமுகவுக்கும் தனியாக கொள்கைகள் இருக்கிறது.

ஆனால், திமுக அதைக் கடைபிடித்தார்களா என்று பார்க்க வேண்டும். பாஜகவால் அதிகம் பயனடைந்தவர்கள் என்றால் அது திமுகதான். பொருளாதார ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி, முந்தைய காலங்களில் பாஜகவின் பெயரைத் தாங்கி, பாஜகவுக்கு வால் பிடித்து வளர்ந்தவர்கள் திமுகவினர். இன்று இதையெல்லாம் மறந்துவிட்டுப் பேசக் கூடாது என்று அவர் கூறினார்.

முன்னதாக, அண்மையில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசும்போது, விஜயகாந்த் எப்போது சிங்கம் போல் தான் வருவார். ஆனால் பன்றிகள் கூட்டமாக வரும். விஜயகாந்திற்கு உடல் நலக்குறை என்று கூறுபவர்கள், ஏண்டா என் வீட்டு வாசலில் வந்து நிற்கீறீர்கள். எங்ககிட்ட வைத்து கொள்ளாதீர்கள், நாங்கள் ஓங்கி கொடுக்கின்ற கட்சி என்று கூறினார். இது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது.
 

.