கைரானா தொகுதியில் ஷாமி என்ற பகுதியில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
Kairana: உத்தர பிரதேச மாநிலம் கைரானா மக்களவை தொகுதியில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தர பிரதேச மாநிலத்தின் 8 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது.
கைரானா மக்களவை தொகுதியின் ஷாமி என்ற பகுதியில் சுமார் 25 முதல் 30 பேர் வரையில் முறையான ஆவணங்கள் ஏதும் இன்றி தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர்களை வெளியேறும்படி அங்கிருந்த பாதுகாப்பு படையினர் வலியுறுத்தினர். இதற்கு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு கை கலப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து ஷாம்லி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், 'பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்றால், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி வாக்களிக்க சிலர் வந்துள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
உத்தர பிரதேசத்தில் சகாரன்பூர், கைரானா, முசாபர்நகர்,பிஜ்னோர்,மீரட், பாக்பாத், காஜியாபாத், கவுதம் புத்தா நகர் ஆகிய 8 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மாநிலத்தில் மொத்தம் 8 தொகுதிகள் உள்ளன. இங்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முறைகேடு நடந்திருக்கும் கைரான மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தபசம் ஹசனை நிறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஹசன் இங்கு வெற்றி பெற்றார். சமாஜ்வாதி கட்சி - ராஷ்டிரிய லோக் தள கூட்டணியின் வேட்பாளராக ஹசன் களத்தில் நிற்கிறார்.