தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். அதிமுக தரப்பில் கூட்டணி கட்சியான பாஜகவின் வேட்பாளராக தமிழிசை நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், கனிமொழியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார். வாக்குக் கேட்டு வந்தபோது, அங்கிருந்தவர்கள் ஆரத்தி தட்டை உதயநிதியிடம் அளித்தனர். அதனை வாங்கிய கனிமொழி, உதயநிதிக்கு திலகமிட்டார்.
பின்னர் உதயநிதி பேசியதாவது-
5 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் நாமம்தான் போட்டார். ரூ. 500, 1000 செல்லாது என அறிவித்தார். இதனால் என்ன பலன் ஏற்பட்டது?
புதிய இந்தியா பிறக்கும் என்றார். பிறந்ததா?. புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். துணை ராணுவத்திற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும்?
2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினார். ஜி.எஸ்.டி. வரியை விதித்து 10 கோடி பேருக்கு மோடி வேலையில்லாமல் செய்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தை அடக்க வழி தெரியாமல் 13 பேரை சுட்டுக் கொன்றனர்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.