வேலூர் தொகுதி தேர்தல் தொடர்பாக நேற்று நள்ளிரவு அறிவிப்பு வெளி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அறிவிப்பு வந்துள்ளது.
Vellore Constituency: வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த 14-ம்தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று அவர் இந்த உத்தரவை பிறப்பித்தருக்கிறார்.
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று நள்ளிரவு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரவில்லை. இன்று காலை தேர்தல் ரத்து ஆகாது என தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த சூழலில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைப்பதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.