This Article is From Apr 04, 2019

''கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக ஒருவார்த்தை கூட பேச மாட்டேன்'' : ராகுல் காந்தி

கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இங்கு வயநாட்டின் தேர்தல் பொறுப்பாளராக தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கு ராகுல் காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • வட இந்தியா, தென்னிந்தியா என 2 தொகுதியில் ராகுல் போட்டி
  • வயநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து களம் காண்கிறார்
  • ராகுலின் முடிவால் இடதுசாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Wayanad:

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேச மாட்டேன் என்று கூறியுள்ளார். இன்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

ஏற்கனவே அமேதி தொகுதியில் போட்டியிடும்  ராகுல் காந்தி, தனது 2-வது தொகுதியாக வயநாட்டை தேர்வு செய்திருக்கிறார். அங்கு அவர் போட்டியிடுவது கம்யூனிஸ்ட்  கட்சிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள அரசியலில் காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேதான் போட்டி காணப்படுகிறது. சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. 

இந்த நிலையில், திடீர் திருப்பமாக தென்னிந்தியாவில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என  அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக கேரளா என்றும், அதிலும் குறிப்பாக வயநாட்டில் ராகுல் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்திருக்கிறார். 

வேட்பு மனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது-
வட இந்தியா, தென்னிந்தியா என எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் அவற்றை நாசம் செய்யும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்.-ம் பாஜகவும் ஈடுபடுகின்றன. இந்தியாவின் வரலாறு, கலாசாரத்தை அழிக்கும் முயற்சியை இந்த இரு அமைப்புகளும் செய்கின்றன. 

எனவேதான் தென்னிந்தியாவில் நான் போட்டியிட முடிவு செய்தேன். இந்தியா ஒருங்கிணைந்த நாடு என்பதை பாஜகவுக்கு சொல்லத்தான் நான் இங்கு போட்டியிடுகிறேன். காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே மோதல்கள் இருக்கின்றன. எதிர்காலத்திலும் இருக்கும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு எதிராக கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிப்பேன். ஆனால் அவர்களை விமர்சித்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன் என்பதை கேரள மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

.