மக்களவை தேர்தலில் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
Raebareli, Uttar Pradesh: 2004 மக்களவை தேர்தலை மறந்து விடாதீர்கள் என்று பாஜகவுக்கு சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு சோனியா காந்தி வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
செய்தியாளர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும்போது, ''மோடி என்ன வெல்லவே முடியாத நபரா?'' என்று அவர்களிடம் சோனியா கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, '2004 மக்களவை தேர்தலை பாஜக மறந்து விட வேண்டாம். அன்றைய சூழலில் அடல் பிகாரி வாஜ்பால் வெல்லவே முடியாதவராகத்தான் இருந்தார். ஆனால் நாங்கள் அவரை தோல்வி அடையச் செய்தோம்.' என்று கூறினார்.
இதன் பின்னர் ராகுல் காந்தி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
இந்திய வரலாற்றில் சிலபேர் ஆணவம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். அப்படி இருந்ததால்தான் தாங்கள் வெல்லவே முடியாதவராக அவர்களது மனதில் எண்ணிக் கொண்டனர். மக்களை விடவும் தாங்கள் பெரியவர்கள் என்ற எண்ணமும் அவர்கள் மனதில் காணப்பட்டது. ஆனால் உண்மையில் மக்களைவிட யாருமே பெரியவர்கள் இல்லை. வெல்ல முடியாதவர் மோடி என்ற நிலைமை இந்த தேர்தலுடன் முடிவுக்கு வந்து விடும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். 1996, 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் வாஜ்பாய் வெற்றி பெற்றார். ஆனால் 2004 மக்களவை தேர்தலில் அவரை காங்கிரஸ் வீழ்த்தியது. இந்திய ஒளிர்கிறது என்ற பிரசாரத்தை அன்றைய சூழலில் பாஜக முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.
2004 தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் ஆகுவதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. வெளிநாட்டில் பிறந்த ஒருவர் எப்படி இந்தியாவின் பிரதமர் ஆகலாம் என்பது அவர்களின் வலியுறுத்தலாக இருந்தது. இந்த சூழலில்தான் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சி பிரதமராக தேர்வு செய்தது.