This Article is From Apr 12, 2019

''தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும்'' - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

''தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும்'' - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் ஏற்படுத்தப்படும் என்று ராகுல் தெரிவித்தார்.

தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்றும் 6 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தி ராகுல் காந்தி பேசியதாவது- 

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காகவோ, ஏழைகளுக்காகவோ ஆட்சி நடத்தவில்லை. அம்பானி, அதானி போன்ற 15 நபர்களுக்காக மட்டுமே ஆட்சியை நடத்துகிறார். ஏழை விவசாயிகள் மட்டும் கடன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

மோடி ஆட்சியில் இருக்கும் வரையில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கும். தமிழகத்தின் நலனை மோடி புறக்கணிக்கிறார். தமிழகத்தை தமிழர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும்.  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார்.

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தினர். அவர்களை சந்தித்து குறை கேட்பதற்கு கூட பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை. வறுமையை ஒழிக்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வரவுள்ளது. நாடு முழுவதும் ஏழை மக்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

நாட்டில் வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கு விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது விவசாயத்திற்கென்று தனி பட்ஜெட் ஏற்படுத்தப்படும். கருப்பு பணத்தை மீட்டு நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவேன் என்று மோடி சொன்னார். எத்தனை பேருக்கு அவர் ரூ. 15 லட்சத்தை அளித்துள்ளார்?

தமிழ் கலாசாரத்தை போற்றிப் பாதுகாக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழகத்தின் குரல் மத்தியில் கேட்கவில்லை. எங்களுக்கு ஆதரவளித்து அதனை மத்தியில் கேட்கச் செய்ய வேண்டும். வெறுப்பு அரசியல் மூலமாக தமிழகத்தில் காலூன்ற பாஜக பார்க்கிறது. அன்பின் மூலமாகத்தான் தமிழ் மக்களின் ஆதரவை பெற முடியும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

.