தேசிய ஒருமைப்பாட்டுக்கு தினகரன் சரியான நபர் என்கிறார் சுப்ரமணிய சாமி.
தமிழகத்தில் இருக்கும் தேசியவாதிகள் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அவரது கட்சி இருக்கும் நிலையில், சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணியை தவிர்த்து தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியை எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒதுக்கியது போக மற்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போட்டியிடுகின்றனர்.
அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி, தமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் அனைவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஊழலைப் பொருத்தளவில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதான் என்று கூறியுள்ள சுப்ரமணியசாமி, தேசிய ஒற்றுமைக்கு தினகரன் சிறந்த நபராக இருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
சுப்ரமணிய சாமி சார்ந்திருக்கும் பாஜக தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 5 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
தனது சொந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் டிடிவிக்கு ஆதரவு தெரிவித்து சுப்ரமணிய சாமி ட்விட் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.