வாக்களிப்பது தொடர்பான விதிமுறைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டுள்ளார்.
வாக்குச்சாவடியில் செல்ஃபோன்களை பயன்படுத்த வாக்காளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 18-ம்தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரம் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
நாளை மாலை 6 மணி முதல் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. வாக்காளர்கள் 18-ம்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி முதல் வாக்களிக்கலாம். மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் மாலை 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதியில் வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட பணியாளர்கள் நாளை மாலை 6 மணிக்குள் அந்த தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும். தேர்தல் தொடர்பான விளம்பரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க கூடாது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை கொண்டு செல்லலாம். ஆனால் பயன்படுத்தக் கூடாது.
மே 19-ம்தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.