This Article is From Mar 25, 2019

குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டி: டிடிவி

குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டி: டிடிவி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அதில், ''இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். தேர்தலை சந்திப்பதற்கு ஏதுவாக எங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தலைமைத் தேர்தல் ஆணையம் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் பதிலளித்த தேர்தல் ஆணையம், தினகரனின் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று கூறியது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பான விசாரணையை நாளை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார். மேலும், அதிமுகவை உரிமை கோரி வழக்கு நடைபெற்று வந்ததால் தான் கட்சியை பதிவு செய்யவில்லை என்பது அனைவரும் அறிந்தது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு பொதுவான சின்னம் ஒதுக்காது என்பது அனைவரும் அறிந்தது. இந்த வழக்கில் எங்களின் நிலை அறிந்து பொதுச்சின்னம் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

.