This Article is From Mar 26, 2019

''எந்த சின்னம் ஒதுக்கினாலும் வெற்றி பெறுவோம்'' - டிடிவி தினகரன் நம்பிக்கை

குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அணுகினார். ஆனால் அவருக்கு அந்த சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

''எந்த சின்னம் ஒதுக்கினாலும் வெற்றி பெறுவோம்'' - டிடிவி தினகரன் நம்பிக்கை

பொதுவான சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

New Delhi:

தேர்தல் ஆணையம் எந்தச் சின்னத்தை ஒதுக்கினாலும், அதில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தன்னை எதிர்த்து நின்ற திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் டிடிவிக்கு 89 ஆயிரத்து 13 வாக்குகள் கிடைத்தன. அதிமுக வேட்பாளருக்கு 48 ஆயிரத்து 306 வாக்குகள் கிடைத்தன. 

டெபாசிட்டை இழந்த திமுக 24 ஆயிரத்து 651 வாக்குகளை பெற்றது. இந்த நிலையில் மக்களவை மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் டிடிவியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. 

இந்த தேர்தலில் தங்களுக்கு குக்கர் சின்னத்தை அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வலியுறுத்தி தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், தினகரனின் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று கூறியது. 

இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்காவிட்டால் பொதுவான சின்னத்தை வழங்கலாம் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் சின்னம் விவாகரம் குறித்து பேட்டியளித்த டிடிவி தினகரன், எந்த சின்னத்தை ஒதக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். 

நாளை முதல் ராயபுரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளதாக கூறிய அவர், எந்த சின்னம் ஒதுக்கப்பட்டாலும் அது தனது கட்சியின் வெற்றிச் சன்னமாக இருக்கும் என்றும் டிடிவி தெரிவித்தார். 
 

.