This Article is From Apr 12, 2019

'யாருக்கு ஓட்டுப் போடப் போறீங்க?' - ஸ்டாலின், மோடியை விளாசிய கமல்! வைரலாகும் வீடியோ!!

''மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வுங்குற பேர்ல ஒரு பொண்ண கொன்னாங்களே... அந்தப் பொண்ணோட அப்பா - அம்மா கிட்ட பாருங்க; அவங்க சொல்லுவாங்க யாருக்கு போடக் கூடாதுன்னு''

'யாருக்கு ஓட்டுப் போடப் போறீங்க?' - ஸ்டாலின், மோடியை விளாசிய கமல்! வைரலாகும் வீடியோ!!

வரும் ஏப்ரல் 18. குனிஞ்சு கும்பிடாதீங்க. நிமிர்ந்து ஒட்டுப் போடுங்க... என்கிறார் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசார வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டாலின், மோடி உள்ளிட்டோரை அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவின் தொடக்கத்தில் அரைக்கை சட்டை அணிந்து கமல் நிற்கிறார். அப்போது, ''அந்தக் கலைஞரின் மகனாக இருக்கக் கூடிய நான் சொல்லுகிறேன்'' என்று ஸ்டாலினின் குரல் ஒலிக்கிறது. அதன்பின்னர் மோடியும், ஓபிஎஸ், எச். ராஜா போன்றோரும் பேசுவது போன்ற குரல் கேட்கிறது. 

இதைக் கேட்டு எரிச்சல் கொள்ளும் கமல், எதையோ தூக்கி கோபத்துடன் எறிகிறார். அந்தப் பொருள் ஏதோ ஒன்றை உடைத்து தள்ளுகிறது. இதன் பின்னர் கமல் பேசியதாவது-

'முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டுப் போடப் போறீங்க? குடும்ப அரசியல்-ங்ற பேர்ல நாட்டையே குழி தோண்டி புதைச்சாங்களே! அவங்களுக்கா? இல்ல நம்ம உரிமைக்காக போராடும்போது நம்மள அடிச்சு தொறத்துனாங்களே! அவங்களுக்கா? நலத்திட்டம்ங்ற பேர்ல நம்ம நிலத்தையே நாசமாக்கி, நம்ம விவசாயிங்கள அம்மணமாக்கி நாட்டையே தல குனிய வச்சாங்களே! அவங்களுக்கா? இல்ல கார்ப்பரேட் கைக்கூலியா மாறி பணத்துக்காக நம்ம மக்களையே சுட்டுக் கொன்னாங்களே! அந்த அயோக்ய அரசியல்வாதிகளுக்கா? யாருக்கு ஓட்டுப் போடப்போறீங்க? 

நீ என்னடா சொல்றது? எங்களுக்கு தெரியும். எங்க அப்பா அம்மா யாருக்கு ஓட்டுப் போட சொல்றாங்களோ அவங்களுக்குத்தான் போடுவோம் அப்டினு, நீங்க சொல்றது கேக்குது... கரெக்ட்... அம்மா அப்பா சொல்றபடி கேக்கணும்... ஆனா எந்த அப்பா அம்மா சொல்றபடி கேக்கணும்னுங்றத நான் சொல்றேன். கொஞ்சம் கேளுங்க.

மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வுங்குற பேர்ல ஒரு பொண்ண கொன்னாங்களே... அந்தப் பொண்ணோட அப்பா - அம்மா கிட்ட பாருங்க; அவங்க சொல்லுவாங்க யாருக்கு போடக் கூடாதுன்னு. நாட்டை ஆள தகுதியே இல்லாத தலைமை இருக்குற இந்த நாட்டுல அத தட்டிக் கேக்குற ஒருத்தனா... உங்கள்ல ஒருத்தனா கேக்றேன். யாருக்குய்யா ஓட்டுப் போடப் போறீங்க...

வரும் ஏப்ரல் 18. குனிஞ்சு கும்பிடாதீங்க. நிமிர்ந்து ஒட்டுப் போடுங்க...ஏப்ரல் 18... நீங்கள் வெற்றிக் களம் காணும் நாள். நாங்களும்தான். வணக்கம்.'

இவ்வாறு கமல் அந்த வீடியோவில் பேசியுள்ளார். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.