This Article is From Apr 05, 2019

மோடி வீட்டில் சோதனையிடத் தயாரா? வருமான வரித்துறையினருக்கு ஸ்டாலின் கேள்வி!!

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மோடி வீட்டில் சோதனையிடத் தயாரா? வருமான வரித்துறையினருக்கு ஸ்டாலின் கேள்வி!!

கரூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

மோடி வீட்டில் கோடி கோடியாய் பணம் உள்ளது. அவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிட தயாரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம்தேதி தொடங்குகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணியை பொறுத்தளவில் கூட்டணி கட்சியான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவைகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

திமுக தரப்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுகிறார். மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின், உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் கரூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஜோதி மணியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தம்பிதுரை குற்றம் சாட்டி வந்தார். இப்போது அவர் மோடியை ஆதரித்து பிரசாரம் செய்வது ஏன்?. நீட் தேர்வு தமிழகத்திற்கு கொண்டு வர மத்திய அரசு முன்பு முயற்சி எடுத்தபோது அதனை திமுக தடுத்து நிறுத்தியது. 

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அமைச்சர்கள் யாராவது வெளியே வந்தார்களா? ஆனால் இப்போது அவர்கள் தங்களை எம்.ஜி.ஆர். போல் நினைத்துக் கொண்டு வேனில் நின்று கொண்டு தேவையற்ற விமர்சனங்களை செய்து வருகின்றனர். 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்காது. கருத்துக் கணிப்புகளை பொறுத்தளவில் திமுக பெரும் வெற்றியை பெற்றுவிடும் என்றே தெரிவிக்கின்றன. 

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சென்று வருமான வரித்துறையினர் சோதனை செய்ய தயாரா? மோடி வீட்டிலேயே கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சென்று வருமான வரித்துறை சோதனை செய்யுமா?.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.