லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவ ஒப்பந்தம்
லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
முதல்கட்டமாக லண்டன் சென்ற தமிழக முதல்வருக்கு, லண்டன் வாழ் தமிழர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை சந்தித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'அயல்நாடுகளில் மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணித்தரத்தின் மேம்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.' என்று கூறியிருந்தார்.
இதே போல் தமிழகத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசின் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தானது.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக அதன் நிர்வாகத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட் - சூட் அணிந்து கலந்து கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னர் லண்டனில் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் கால் சென்டரின் இயக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.