This Article is From Jan 26, 2019

முடிவுக்கு வந்தது அமெரிக்க அரசு முடக்கம்: முற்றுப்புள்ளி வைத்தார் அதிபர் ட்ரம்ப்!

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்த பிறகு, ட்ரம்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்

முடிவுக்கு வந்தது அமெரிக்க அரசு முடக்கம்: முற்றுப்புள்ளி வைத்தார் அதிபர் ட்ரம்ப்!

மெக்சிக்கோ நாட்டு எல்லையில் சுவர் எழுப்புவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கடந்த மாதம் கோரியிருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump)

மெக்சிக்கோ நாட்டு எல்லையில் சுவர் எழுப்புவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கடந்த மாதம் கோரியிருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அவருக்கு எதிர்கட்சி ஒத்துழைப்பு கொடுக்காததால், பெரும்பாலான நிதி ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படலாமல் கிடப்பில் போடப்பட்டது. இதில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிதியும் அடங்கும். இந்த காரணத்தால், அமெரிக்க வரலாற்றில் இல்லாதபடி சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் அரசு முடக்கம் ஏற்பட்டது. அதற்கு தற்போது தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ட்ரம்ப். 

அதிபர் ட்ரம்ப் முன்னர் எடுத்த முடிவால், சுமார் 800,000 அரசு ஊழியர்கள், 5 வாரங்களுக்குச் சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவின் எதிர்கட்சியான ஜனநாயாகக் கட்சி, ‘இப்போதாவது ட்ரம்ப் பாடம் கற்றிருப்பார் என்று நம்புகிறோம்' என்றுள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்த பிறகு, ட்ரம்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதே நேரத்தில் மெக்சிக்கோ சுவருக்கான நிதி சீக்கிரம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், இல்லையென்றால் நிலைமை மீண்டும் மோசமடையும் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், “அரசை மீண்டும் நடத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக நான் ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கிறேன். ஆனால், அடுத்த 21 நாட்களில் மெக்சிக்கோ சுவருக்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால், பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மீண்டும் அரசு முடக்கம் செய்யப்படும். இல்லையென்றால், நான் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்” என்றுள்ளார். 
 

.