நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியோ 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி புதிய அமைச்சரவையைப் பாராட்டும் வகையில், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள். இந்தியாவின் வளர்ச்சிக்காக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்துக்காக உங்களுடன் இணைந்து பணி செய்வதை எதிர்நோக்குகிறோம்” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளது.
பதவியேற்பு நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இருந்தனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியோ 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்தத் தோல்விக்குப் பிறகு, அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவரின் இந்த முடிவுக்கு கட்சியின் முக்கிய புள்ளிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
“காங்கிரஸ் ஒரு குடும்பக் கட்சி” என்கின்ற விமர்சனத்தைத் தூக்கி எறியும் நோக்கில், நேரு - காந்தி குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று ராகுல் நினைக்கிறார்.
நேற்று பிரதமர் மோடியுடன் 57 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சுமார் 8,000 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், தொண்டர்களின் ஆரவாரத்துடன் பதவியேற்றுக் கொண்டார் மோடி.
வரலாற்றுக் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, “அடுத்த ஒரு மாதத்துக்கு தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஊடகங்கள் இந்த உத்தரவுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியது.
நேற்று அமைச்சர்களாக பதவியேற்றவர்களின் இலாகாக்கள் இன்று இரவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோருக்கும் அதிக அதிகாரம் உள்ள துறைகள் ஒதுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.