ஜனவரி 4 ஆம் தேதி, ராமர் கோயில் தொடர்பான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
New Delhi: ராமர் கோயில் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்று பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமர் கோயிலைப் பொறுத்தவரை, நீதிமன்றம் என்ன முடிவு சொல்கிறது என்பது தெரியாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க முடியாது. சட்ட சாசனத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டப்படும்' என்று கருத்து தெரிவித்தார். பிரதமரின் இந்தக் கருத்தை விமர்சித்துள்ள சிவசேனா, ‘பிரதமர் மோடிக்கு ராமரை வட சட்ட சாசனம்தான் பெரியதாக இருக்கிறது' என்றுள்ளது.
இது குறித்து சிவ சேனா தரப்பு மேலும் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றம், ராமர் கோயில் விவகாரம் ஒன்றும் அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய விஷயமல்ல என்று கூறியிருந்தது. பிரதமர் மோடியும் இதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளார். பிரதமர், தனது நிலைப்பாட்டைப் பற்றி தெளிவான முடிவுக்கு வந்துள்ளது பாராட்டுக்குரியதுதான். ராமர் கோயில் கட்டுவதற்கு எந்த வித அவசரச் சட்டமும் கொண்டு வரப்படாது என்று அவர் இதன் மூலம் தெரிவித்துள்ளார். இதற்கு அர்த்தம் ராமர், சட்ட சாசனத்தை விட ஒன்றும் பெரியவர் இல்லை என்பதுதான்' என்று விளக்கமளித்துள்ளது.
அயோத்தியில் ராமஜென்ம பூமி உரிமை தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பரப்பளவிலான வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அக்ஹாரா மற்றும் ராம் லீலா அமைப்பினர் ஆகிய மூன்று தரப்பினரும் மேற்படி நிலத்தை சரி சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி இந்த நிலம் யாருக்கு சொந்தமானது? என தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் முன்னர் நிராகரித்து விட்டது.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்துதான் ஜனவரி 4 ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் விசாரணை ஒரு புறம் இருந்தாலும், பாஜக-வின் சில உறுப்பினர்களும் வலதுசாரி அமைப்புகளும், ‘ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்' என்று வலியுறுத்தி வருகின்றன.