விமான பைலட்டிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
New Delhi: ஒரு மணி நேரத்திற்கு கூடுதல் எரிபொருளை வைத்திருக்க வேண்டிய நிலையில் கூடுதலாக 10 நிமிடத்திற்கு மட்டுமே எரிபொருளை வைத்துக் கொண்டு விஸ்தாரா தனியார் விமானம் தரையிறங்கியுள்ளது. கூடுதலாக வான்வெளியிலோ அல்லது மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட நேர்ந்தாலோ பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
விஸ்தாரா தனியார் விமானம் ஒன்று 153 பயணிகளுடன் மும்பையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் லக்னோவில் தரையிறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதற்கான ட்ராபிக்கை வான்வெளியில்விமானப் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் (ATC – Air Traffic Control) ஒழுங்குமுறைப் படுத்தும். இதற்கான சிக்னல்கள் ஏடிசியிடம் இருந்து சம்பந்தப்பட்ட விமானத்தின் பைலட்டுக்கு வழங்கப்படும்.
இந்த நிலையில் விஸ்தாரா விமான பைலட் ஏ.டி.சி.யிடம் எரிபொருள் குறைவாக உள்ளது என்று கத்தத் தொடங்கியுள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட ஏ.டி.சி. அதிகாரிகள், விஸ்தாராவுக்கான ட்ராபிக்கை கிளியர் செய்துள்ளனர். இதையடுத்து விமானம் லக்னோவில் தரையிறக்கப்பட்டது.
பின்னர் அதனை சோதனை செய்ததில் அதில் 300 கிலோ பெட்ரோல் மட்டுமே இருந்தது. இதனை வைத்துக் கொண்டு வான்வெளியில் 10 நிமிடங்களுக்கு மட்டுமே வட்டமடிக்க முடியும்.
மோசமான வானிலை காரணமாக, பக்கத்து விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்று இந்த விமானம் அறிவுறுத்தப்பட்டிருந்தால் நிலைமை விபரீதம் ஆகியிருக்கும்.
பொதுவாக மும்பையில் இருந்து டெல்லி செல்லும் விமானங்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும். இதுதொடர்பாக விஸ்தாரா நிறுவனம் அளித்த பதிலில் போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பைலட்டிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறைவான எரிபொருளுடன் விமானம் தரையிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.