This Article is From Oct 15, 2018

‘முழுக்கப் பொய்யானவை..!’- குற்றச்சாட்டுகள் குறித்து வீடியோ வெளியிட்ட வைரமுத்து

அவை உண்மையாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம்

Advertisement
தெற்கு Posted by

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே தனது தரப்பு கருத்துகளை சின்மயி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வீடியோ வெளியிட்டும் தனது அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து சின்மயி கூறி வருகிறார். இந்நிலையில் அவரின் குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து, வீடியோ மூலம் பதில் கொடுத்துள்ளார்.

சின்மயி தனது ட்விட்டரில், ‘2005 அல்லது 2006 என்று நினைக்கிறேன். ஸ்விட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காக சென்றிருந்தோம். அங்கு கச்சேரியை அரங்கேற்றிய பிறகு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார். எதற்கு என்று நாங்கள் கேட்டதற்கு, ‘வைரமுத்து இருக்கும் ஓட்டலுக்கு செல்லுங்கள்’ என்று அவர் தெரிவித்தார். எதற்கு என்று கேட்டதற்கு, ‘அவருக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்’ என்றார். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

  .  

 

Advertisement

இது தமிழ் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், வைரமுத்து வீடியோ மூலம், ‘என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்கப் பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்கக் காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடு கடந்த ஒரு வார காலமாக ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்துத் திரட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் வழக்குப் போடலாம். சந்திக்கக் காத்திருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என்று இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்குத் தலை வணங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement