பிரபல பாடலாசிரியர் வைரமுத்து உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
வைரமுத்துவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரம், ‘வைரமுத்து மதுரையில் இருக்கும் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அங்கு அவர் உட்கொண்ட உணவினால், ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக உள்ளார். சீக்கிரமே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' என்று தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் #MeToo விவகாரத்தில், வைரமுத்துவும் பல பெண்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குறிப்பாக பிரபல பாடகி சின்மயி, வைரமுத்து மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அந்த விவகாரம் தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
சின்மயி கூறிய குற்றச்சாட்டுகளை வைரமுத்து முழுவதுமாக மறுத்துள்ளார். சின்மயி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியாக பதிலடி கொடுப்பேன் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)