Alagiri on Rajini - "வெற்றிடத்தை ரஜினியால்தான் நிரப்ப முடியும்"
Alagiri on Rajini - ‘தமிழக அரசியல் களத்தில் ஆளுமையுள்ள தலைவருக்கான வெற்றிடம் உள்ளது,' என்று நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) சில நாட்களுக்கு முன்னர் கருத்து கூறியிருந்தார். ரஜினியின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் சகோதரனும், திமுக-விலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி (M.K.Alagiri), ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜனியின் கருத்து பற்றி திமுக பொருளாளர் துரைமுருகன், “நீண்ட படப்பிடிப்புகளில் இருப்பதனால், ரஜினிக்கு தமிழக அரசியல் சூழ்நிலை பற்றி தெரிந்திருக்கவில்லை. அவர் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்கிறார். ஆனால், களத்தில் வந்து பார்த்தால், அந்த வெற்றிடத்தை தளபதி ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று தெரியும்,” என்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிடம் இல்லை என்பதை அதிமுக நிரூபித்துள்ளது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தல் வெற்றியால் தமிழகத்தில் வெற்றிடம், காலி இடம் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது,” என தீர்க்கமான பதில் கருத்துக் கூறியுள்ளார்.
சீமான் இது பற்றிப் பேசுகையில், ‘தமிழ் நிலத்தில் ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை என்பதே, தமிழர்களை இழிவுபடுத்தும் கருத்து. பெரும் அறிஞர்களும், வல்லுநர்களும் வாழ்ந்த நிலம் இது. இளைஞர்கள், அரசியல் தெளிவுடன் துடிப்பாக இருக்கும்போது, இப்படி ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது,' என காட்டமாக தெரிவித்துள்ளார்.
இப்படி பலரும் பேசி வரும் நிலையில், மு.க.அழகிரி, “ரஜினி சொன்னது உண்மைதான். தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை ரஜினியால்தான் நிரப்ப முடியும்,” எனக் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.