திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பெரியாரின் 140வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரின் சிலையை அவமதித்தவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பெரியாரின் பிறந்த நாளையொட்டி, திராவிட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பெரியார் சிலைக்கும், பெரியார் படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் சிலர், பெரியார் சிலையைச் சேதப்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டு வருகின்றனர்.
இன்று காலை, சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் இருக்கும் பெரியார் சிலை மீது ஒருவர் காலணி வீசினார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரைத் தாக்கி காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் திருப்பூரிலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் ஸ்டாலின், ‘சுயமரியாதை வெளிச்சம் பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழ்நாடே நன்றி செலுத்துகிற நேரத்தில், சமூகநீதிக் கொள்கையை தகர்த்து, ஒற்றுமை உணர்வை குலைத்து - மதவாதப் பேயாட்டம் ஆட நினைக்கும் மூடர்கள் பெரியார் அவர்களின் சிலையை அவமானப்படுத்த முயற்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மதவெறி சக்திகளின் பின்னணியில் இதுபோன்ற இழிவான - தரங்கெட்ட செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை ஒட்ட நறுக்க வேண்டியது நம் கடமை. ஆகவே, உடனடியாக அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதோடு, இதன் பின்னணியில் இருக்கும் அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்!’ என்று பதிவிட்டுள்ளார்.