This Article is From Jun 01, 2018

'நாங்க ரெடி, முதலமைச்சர் ரெடியா?'- ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக

ஸ்டெர்லைவட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த திமுக, அதிமுக-வுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

'நாங்க ரெடி, முதலமைச்சர் ரெடியா?'- ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக

திமுக-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

ஹைலைட்ஸ்

  • ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிசூட்டில் 13 பேர் இறந்துள்ளனர்
  • திமுக, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வலுவான நடவடிக்கை வேண்டும் என்றுள்ளது
  • தற்போது, சட்டமன்ற புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளது திமுக

ஸ்டெர்லைவட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த திமுக, அதிமுக-வுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் 100-வது நாளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது. 

ஆனால், இந்த அரசாணை வலுவானது இல்லையென்றும், நீதிமன்றத்தால் இந்த அரசாணையை சுலபமாக ரத்து செய்ய முடியும் என்று கூறியது திமுக. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கும் வரை சட்டமன்றக் கூட்டங்களில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

இது குறித்து ஸ்டாலின், `ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு இருந்தால், நாளைக்கே அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து, விரிவானதொரு அரசு ஆணையை பிறப்பித்து, நிரந்தரத் தீர்வு காணுவதற்கு நடவடிக்கை எடுத்தால், திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற கூட்டத்தில் உடனே பங்கேற்கத் தயாராக இருக்கிறது' என்று கூறினார். 

மேலும் அவர், `அதுமட்டுமின்றி, அமைச்சரவை முடிவின்படி வெளியிடப்படும் அரசு ஆணை பற்றியும், ஸ்டெர்லைட் ஆலை துவங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றியும், சட்டமன்றத்தில் நாள் முழுவதும் விவாதிக்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். “நாங்க ரெடி; முதலமைச்சர் ரெடியா?” என்பதை உடனே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

திமுக-வின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `திமுக-வினர் அவர்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களாகவே மீண்டும் வந்து தங்கள் சட்டமன்றக் கடமையை ஆற்றட்டும்' என்று மட்டும் கூறியுள்ளார். திமுக, விவாதத்துக்கு அழைத்தது குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.