M.K.Stalin on Byelection - "எப்போதும் தேர்தலுக்காக பணியாற்றுவது என்பது, தேர்தல் பணி மட்டுமல்ல, அஃது இயக்கப் பணியும் இணைந்தது தான்."
M.K.Stalin on Byelection - தமிழகத்தில் காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளான விக்கிரவாண்டி (Vikravandi) மற்றும் நாங்குநேரிக்கு (Nanguneri), கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான அதிமுக-வே (ADMK) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. விக்கிரவாண்டியில் திமுக-வும், நாங்குநேரியில் திமுக (DMK) கூட்டணியில் இருந்த காங்கிரஸும் (Congress) போட்டியிட்டன. இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin), தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
“ஆளும் கட்சியின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சில கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது, அண்ணாவின் கூற்று. அந்த அடிப்படையில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்.
திமுக-வைப் பொறுத்தவரையில் வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை. கலைஞர் வழியில் அனைத்தையும் ஒன்றாகக் கருதும் பரிபக்குவம் பெற்றவர்கள் நாம்.
வாக்களித்தவர்களுக்கு நன்றி செலுத்தும் அதே நேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற மேலும் தொடர்ந்து உழைப்போம்.
எப்போதும் தேர்தலுக்காக பணியாற்றுவது என்பது, தேர்தல் பணி மட்டுமல்ல, அஃது இயக்கப் பணியும் இணைந்தது தான். கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றினோம் என்ற உணர்வை நீங்கள் அனைவரும் பெற்று, நிறைவு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கை வாயிலாக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஸ்டாலின்.