கஜா புயலை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் தொடர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இன்று அவர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘மாநில அரசு ஆய்வு செய்த அறிக்கை சமர்பித்த பின்னர் தான், மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநில அரசு அழுத்தம் கொடுத்து அவசர கால நிதியாக வாங்க முடியும். ஆனால், இந்த அரசு அதையெல்லாம் செய்யவில்லை.
5 நாட்களாக அமைச்சர்கள் சாலை மார்க்கமாக ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போதெல்லாம் புயல் குறித்து அவர்களுக்குத் தெரியவில்லையா. முதல்வர் ஹெலிகாப்ட்டரில் பார்வையிட்ட பின்னர் அரசுக்கு சேதாரம் குறித்து அனைத்தும் தெரிந்துவிட்டனவா?
10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக கொடுத்த நிதியுதவியைத் தற்போது குறைவு என்கிறார்கள். அது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை. அதைத் தற்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? பழைய பல்லவியைப் பாடுவதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போதும் சொல்கிறோம், திமுக, அரசுடன் ஒன்றாக இணைந்து நிவாரணப் பணிகளை செய்ய உறுதியாக இருக்கிறது. ஆனால் அது குறித்து அரசு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புயலை அடுத்த, பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் மீனவர்கள், விவசாயிகள், அதிகாரிகளைக் கூட்டி கருத்துகள் கேட்டிருக்க வேண்டும். கருத்து கேட்டு அதற்கேற்ப முதல்வர் பழனிசாமி நடந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. ஹெலிகாப்டரில் மட்டும் ஆய்வு செய்து விட்டுச் சென்றுவிட்டார்' என்று தெரிவித்தவர்,
தொடர்ந்து, ‘ஊழல் குறித்தும், ரெய்டு செய்தும் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காகத் தான் பாஜக-வுடன் அதிமுக இணக்கமாக இருக்கிறது. மற்றப்படி, தேவையான நிதியைக் கேட்டு பெறும் சாமர்த்தியம் எல்லாம் இந்த ஆட்சியாளர்களுக்கு இல்லை' என்று தமிழக அரசை விமர்சித்தார்.