This Article is From Jun 26, 2018

கோவைக்கு இனி பிரஞ்சு நிறுவனம் தண்ணீர் சப்ளையா!? - மு.க.ஸ்டாலின் காட்டம்

கோயம்பத்தூர் மாநகராட்சிக்குக் கீழ் இருக்கும் 16 லட்சம் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க பிரஞ்சு நிறுனமான சுயஸிடம் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது

கோவைக்கு இனி பிரஞ்சு நிறுவனம் தண்ணீர் சப்ளையா!? - மு.க.ஸ்டாலின் காட்டம்

ஹைலைட்ஸ்

  • கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
  • இது குறித்து சுயஸ் நிறுவனம், தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது
  • இந்தியாவி சுயஸ் மேற்கொள்ளப் போகும் பெரிய திட்டம் இது
கோயம்பத்தூர் மாநகராட்சிக்குக் கீழ் இருக்கும் 16 லட்சம் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க பிரஞ்சு நிறுனமான சுயஸிடம் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் கோவை மக்களுக்கு எதிர்காலத்தில் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று சந்தேகம் கிளப்பியுள்ளார் திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.

பிரான்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட சுயஸ், கோவை மாநகராட்சிக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக தமிழக அரசிடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இது குறித்து தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் சுயஸ், ‘கோவைக்கு அடுத்த 26 ஆண்டுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக 3 ஆயிரத்து 150 கோடி ரூபாயில் சுயஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியாவிலேயே சுயஸ் நிறுவனம் மேற்கொள்ளப் போகும் மிகப் பெரிய திட்டம் இதுதான். உலகத்தின் பல்வேறு நாடுகளில் நாங்கள் தரமான நீரை பெரும் மக்கள் தொகைக்கு வழங்கி வருவதால், கோவை மக்களுக்கும் தரமான குடிநீரை எங்களால் தொடர்ந்து கொடுக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து ஸ்டாலின், ‘பிரான்ஸ் நாட்டின் சுயஸ் என்ற நிறுவனத்திற்கு கோவைக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை, கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3 ஆயிரத்து 150 கோடிக்கு, தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசு தாராளமாக வழங்கியிருக்கிறது. இதற்குமுன், பொலிவியா நாட்டில் கொச்சபம்பா நகரில் செமப்பா என்ற தனியார் நிறுவனத்திடமும் அதன்பிறகு இந்த சுயஸ் நிறுவனத்திடமும் குடிநீர் வழங்கிட உரிமம் வழங்கப்பட்டபோது, கட்டணம் செலுத்தினால் மட்டுமே குடிநீருக்கான அட்டை வழங்கப்பட்டு, அதனை இயந்திரத்தில் செருகினால்தான் தண்ணீர் பெற முடியும் என்ற சிக்கலான நிலை உருவானது. இதையடுத்து, அந்த மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் சுயஸ், பொலிவியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது. இதைவைத்துப் பார்க்கும் போது, இனி எதிர்காலத்தில், கோவை மாநகர மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்கு இந்தத் தனியார் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, அதன் தயவை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் அபாயம் உள்ளது. தரமற்ற அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு, அ.தி.மு.க. அரசு கோவை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் உரிமத்தை மாநகரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு விற்றிருக்கிறது.’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.