இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பரேவைக் கூட்டம் இன்று காலை 10 மணி அளவில், தமிழக தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்கட்சியான திமுக வெளிநடப்பு செய்தது.
சட்டப்பேவையிலிருந்து வெளியே வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி எடுத்த முடிவு குறித்து பேசுகையில், ‘தமிழக அரசு அனைத்து மட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. மத்திய அரசிடம், 15,000 கோடி ரூபாய் கஜா புயலுக்கு நிவாரணம் வேண்டும் என்றது தமிழக அரசு. ஆனால், 1,500 கோடி ரூபாய்க்குக் கூட நிதியை இந்த அரசால் வாங்க முடியவில்லை.
ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகமே கொதித்து பேட்டி தந்திருக்கிறார். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணை செய்யப்பட வேண்டும்.
பல்வேறு ஊழல் புகார்கள் ஆட்சியாளர்கள் மீதே இருக்கிறது. அது குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அதிமுக அரசு தயார் செய்து கொடுத்த உரையை ஆளுநர், தலைமைச் செயலகத்தில் வாசித்து வருகிறார். அதை எங்களால் ஏற்க முடியாது என்பதற்காகவே, வெளிநடப்பு செய்தோம்' என்று விரிவாக விளக்கம் அளித்தார்.