"நாடாளுமன்றம் கூட்டப்படட்டும். இந்த 38 எம்.பி-க்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுவோம்"
திருச்சியில் கலைஞர் கருணாநிதியின் 96 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலைஞரின் திருவுருவச்சிலையை, தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திறந்துவைத்து, உரையாற்றினார்.
ஸ்டாலின் உரையாற்றுகையில், “பலர் கேட்கிறார்கள்… 38 எம்.பி-க்கள் ஜெயித்து என்னப் பயன். அவர்கள் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கிறார்கள். நாடாளுமன்றம் கூட்டப்படட்டும். இந்த 38 எம்.பி-க்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுவோம்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு என்கிற நச்சுப் பாம்பை மத்தியில் ஆளும் பாஜக அரசு புதுத்தப் பார்த்தது. அதற்கு நாம் தீர்க்கமாக தெரிவித்த எதிர்ப்புதான் அவர்கள் பின்வாங்கக் காரணம்.
நீட் தேர்வில் நடைபெற்றுள்ள தற்கொலைகளுக்கு முழுக்க முழுக்க மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசும், மாநிலத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசும்தான் காரணம். அவர்கள் இருவரும்தான் அதற்கு முழு பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி., திருநாவுக்கரசர் பேசுகையில், “இந்த நாடாளுமன்றத் தேர்தல் பலரின் முதல்வர் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கமல்ஹாசன் கட்சி தொடங்கியவுடன் முதல்வராகப் பார்த்தார். தினகரன் ஒரு பக்கம் முதல்வர். விஜயகாந்த் ஒரு பக்கம் முதல்வர். அன்புமணி ஒரு பக்கம் முதல்வர் கனவோடு அலைந்தார். இன்னும் அந்தப் பட்டியலில் 10 பேர் இருப்பார்கள். தமிழகத்தைப் 10 ஆக பிரித்தால் கூட, இருப்பவர்கள் முதலவர்கள் ஆகிவிட முடியாது. ஆனால் ஸ்டாலின், ஆட்சியைக் கலைத்துவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்று நினைக்கவில்லை. முறைப்படி தேர்தலை சந்தித்துதான் முதல்வர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்” என்று உரையாற்றினார்.